இந்தோனேசியாவின் பாங்கா தீவைச் சேர்ந்த ரேனாட்டா ஃபதஹியா என்ற 24 வயது பெண், தனது கணவரின் பழைய திருமணப் புகைப்படத் தொகுப்பைப் பார்த்தபோது ஓர் அதிர்ச்சிகரமான உண்மையைக் கண்டறிந்தார். கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற தனது கணவரின் முந்தைய திருமணத்தின் போது எடுக்கப்பட்ட குழுப் புகைப்படத்தில், மணமகனுக்கு அருகில் ஒரு 9 வயது சிறுமி நின்று கொண்டிருப்பதை அவர் கவனித்தார்.

அந்தச் சிறுமி வேறு யாருமல்ல, அது ரேனாட்டா தான் என்பது அவருக்குப் பின்னரே தெரியவந்தது. தூரத்து உறவினர் என்ற முறையில் அந்தத் திருமணத்தில் அவர் பங்கேற்றுள்ளார். தனது தற்போதைய கணவரின் முதல் திருமணத்தில் தான் ஒரு விருந்தினராகக் கலந்துகொண்ட செய்தி அவரை பெரும் வியப்பில் ஆழ்த்தியது.

தற்போது 62 வயதாகும் ரேனாட்டாவின் கணவருக்கும் அவருக்கும் இடையே 38 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளது. 2009ம் ஆண்டு திருமணத்திற்குப் பிறகு தனது முந்தைய மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற அந்த நபர், 2019ம் ஆண்டில் மீண்டும் ரேனாட்டாவைச் சந்தித்துள்ளார்.

அப்போது மலர்ந்த காதல் 2020ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. சிறு வயதில் முன்பின் தெரியாத ஒரு நபராகத் திருமணத்தில் கலந்துகொண்டு, பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே நபருக்கு மனைவியாக மாறிய இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதனை விதி என்று குறிப்பிட்டாலும், ஒரு தரப்பினர் இவ்வளவு பெரிய வயது வித்தியாசத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.