சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில் காவலர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தவர்களே ஈவிரக்கமின்றி இத்தகைய கொடுமைகளைச் செய்தது நெஞ்சை பதைபதைக்க வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குற்றத்தை நிரூபிக்கப் போராடிய குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளைப் பாராட்டிய கமல், தனிப்பட்ட முறையில் தான் மரண தண்டனைக்கு எதிரானவர் என்றும், அத்தகைய கொடூரக் குற்றம் செய்தவர்கள் எவ்வித சலுகையுமின்றி ஆயுட்காலம் முழுவதும் சிறையில் உழைக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட காவலர்களைத் தாண்டி, உண்மையை மறைக்க முயன்ற அதிகாரிகளையும் அவர் சாடியுள்ளார். காயமடைந்தவர்களை முறையாகப் பரிசோதிக்காமல் சான்றிதழ் அளித்த மருத்துவர், விசாரணை செய்யாமல் சிறையில் அடைக்க உத்தரவிட்ட அதிகாரி மற்றும் மூச்சுத் திணறலால் அவர்கள் இறந்ததாக மனசாட்சியின்றிப் பேசிய ஆட்சியாளர்கள் என அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
