ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி சாதனை படைத்து வரும் ‘துரந்தர் 2’ திரைப்படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ள இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, ரன்வீர் சிங் நடிப்பின் அடுத்த கட்டத்தை எட்டிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமா வரலாற்றில் இரண்டு பாகங்களும் தலா ரூ. 1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த முதல் படம் என்ற வரலாற்றுச் சாதனையை ‘துரந்தர்’ (பாகம் 1 & 2) படைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளியான ‘துரந்தர் 2’ (Dhurandhar 2), பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பிற்குள் ஊடுருவி இந்திய உளவாளிகள் அவர்களை வேட்டையாடும் விறுவிறுப்பான ஸ்பை த்ரில்லர் கதைக் களத்தைக் கொண்டது.

திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வரும் இப்படத்தை பார்த்த விராட் கோலி, சமூக வலைத்தளத்தில் தனது விமர்சனத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

” ‘துரந்தர் 2: தி ரிவெஞ்ச்’ திரைப்படத்தைப் பார்த்தேன். இந்தியாவில் இதுபோன்ற ஒரு சினிமா அனுபவத்தை நான் இதுவரை உணர்ந்ததே இல்லை. சுமார் 4 மணி நேரப் படத்தை ஒரு கணம் கூடக் கண் இமைக்காமல் பார்க்கும் வகையில் இப்படம் செதுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஆதித்யா தார், உங்கள் திறமையும் உறுதியும் இந்தப் படைப்பில் தெரிகிறது. நீங்கள் ஒரு ஜீனியஸ்! படத்தில் நடித்த அனைவரும் தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பாகப் பங்களித்துள்ளனர். குறிப்பாக ரன்வீர் சிங், இந்தப் படத்திற்குப் பிறகு நீங்கள் முற்றிலும் வேறொரு உயரத்தை அடைந்துள்ளீர்கள். உங்கள் நடிப்பு மிகச் சிறப்பானது. உண்மையிலேயே வாவ் (Wow). இவ்வாறு கோலி பதிவிட்டுள்ளார்.

பிரம்மாண்டமான மேக்கிங் மற்றும் தேசபக்தி கலந்த அதிரடி காட்சிகளால் இப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ள நிலையில், விராட் கோலியின் இந்தப் பாராட்டு படக்குழுவினருக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.