உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நபர் திடீரென உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவைச் சேர்ந்த ஹன்சா சிங் என்பவர், திருமணமான இரண்டு ஆண்டுகளிலேயே மாயமானார். பல ஆண்டுகள் தேடியும் அவர் கிடைக்காததால், அவர் இறந்துவிட்டதாகக் கருதி அவரது மனைவி விமலா தேவிக்கு, ஹன்சா சிங்கின் தம்பியான சுகா சிங்குடன் மறுமணம் செய்து வைக்கப்பட்டது.
தற்போது விமலா தேவிக்கு தனது இரண்டாவது கணவர் மூலம் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பிஜ்னோரின் நஹ்தோர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்த ஹன்சா சிங்கை மீட்ட உள்ளூர் காவல்துறை, விசாரணையின் மூலம் அவரது அடையாளத்தைக் கண்டறிந்து பஞ்சாபில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர்.
மேலும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஹன்சா சிங் வீடு திரும்பியது அவரது வயதான தாய்க்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தாலும், அவரது மனைவி விமலா தேவிக்கு இது மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வாழ்ந்து வரும் தனது இரண்டாவது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு, நீண்ட காலத்திற்குப் பின் வந்திருக்கும் முதல் கணவருடன் செல்வதா அல்லது தற்போதைய வாழ்க்கையைத் தொடர்வதா என்ற சட்ட ரீதியான மற்றும் சமூக ரீதியான குழப்பத்தில் அந்த குடும்பம் ஆழ்ந்துள்ளது.
