ஈரான் உடனான போரை மத ரீதியாக நியாயப்படுத்திப் பேசிய அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்ஸெத்துக்கு, கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் லியோ 14-வது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பென்டகனில் நடைபெற்ற கிறிஸ்தவ வழிபாட்டுக் கூட்டம் ஒன்றில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்ஸெத் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “இந்தப் போரில் நாம் வெற்றி பெற்று எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். அமெரிக்க மக்கள் அனைவரும் தங்கள் வீடுகள், பள்ளிகள் மற்றும் தேவாலயங்களில் முழங்காலிட்டு இயேசுவின் பெயரால் இந்தப் போரில் வெற்றி கிடைக்கப் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அரசின் உயர்மட்டப் பதவியில் இருப்பவர், ஒரு போரை வெளிப்படையாக மதத்துடன் இணைத்துப் பேசியது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
கத்தோலிக்கத் திருச்சபையின் வரலாற்றில் அமெரிக்காவில் பிறந்த முதல் போப்பாண்டவர் என்ற பெருமையைப் பெற்றவர் போப் லியோ 14-வது. தனது சொந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சரே போரை மத ரீதியாக நியாயப்படுத்தியதை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார். இதுகுறித்து போப் லியோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, போரை வெளிப்படையாக மதத்துடன் இணைப்பது மற்றும் வெற்றிக்காகப் பிரார்த்திக்கச் சொல்வது இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு முற்றிலும் முரணானது.
பிற நாடுகள் அல்லது மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஆசை இயேசுவின் வழி அல்ல. மற்றவர்களுக்கு எப்படி வாழ்வளிப்பது, அமைதியை நிலைநாட்டுவது என்பதே இயேசு காட்டிய நெறி. போரைத் தூண்டும் விதமாக மதத்தைப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது. மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஆன்மீகத் தலைவரான போப் மற்றும் உலக வல்லரசான அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் இடையிலான இந்தக் கருத்து மோதல் சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போப் லியோவின் இந்தத் தெளிவான நிலைப்பாடு, போர்ச் சூழலில் அமைதியை விரும்புவோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
