உலக நாடுகளுக்கு இடையே நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள கடுமையான பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, நேபாள அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் பாலன் ஷா தலைமையிலான அரசு, எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இனி வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும், அலுவலக நேரமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாற்றப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரும் இந்த புதிய நடைமுறை, எரிபொருள் நெருக்கடியிலிருந்து நாட்டைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகக் கருதப்படுகிறது.

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வுகாணும் வகையில், பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை மின்சார வாகனங்களாக  மாற்றுவது குறித்தும் நேபாள அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கான சட்ட ரீதியான தடைகளை நீக்கி, வாகன உரிமையாளர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்கள் மீதான சார்பைக் குறைத்து, நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடி நிலை மாறும் வரை மின்சார வாகனங்கள் மீதே அரசாங்கத்தின் முழுக் கவனமும் இருக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.