ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியில், மாந்திரீகத்தின் பெயரால் 12 வயது சிறுமி ஒருவர் சொந்த தாயாலேயே நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.

ரேஷ்மி தேவி என்ற அந்தப் பெண்ணுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவரது மகன் நீண்ட நாட்களாக உடல் மற்றும் மனநலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

மகனின் நோயைக் குணப்படுத்த ‘சாந்தி தேவி’ என்ற பெண் மந்திரவாதியை அணுகியபோது, கன்னிப் பெண் ஒருவரைப் பலி கொடுத்தால் மட்டுமே தோஷம் நீங்கும் என அவர் கூறியுள்ளார்.

இதனை நம்பிய ரேஷ்மி தேவி, தனது கள்ளக்காதலன் பீம் ராம் என்பவருடன் சேர்ந்து, நவராத்திரி அஷ்டமி அன்று நள்ளிரவில் தனது சொந்த மகளையே பலி கொடுக்கத் துணிந்துள்ளார்.

சிறுமியின் கால்களைத் தாய் பிடித்துக் கொள்ள, கள்ளக்காதலன் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளான். அதன் பிறகு, அந்தப் பெண் மந்திரவாதி சிறுமியின் அந்தரங்க உறுப்பில் மரக்குச்சியைச் சொருகி சித்திரவதை செய்ததோடு, சடங்கிற்காகச் சிறுமியின் தலையில் தாக்கி ரத்தத்தை எடுத்துள்ளனர்.

பின்னர் சடலத்தைத் தோட்டத்தில் புதைத்துவிட்டு, நாடகமாடியுள்ளனர். போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், தடய அறிவியல் சோதனைகள் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது தாய், கள்ளக்காதலன் மற்றும் பெண் மந்திரவாதி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.