தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கட்சி தொடங்கியதிலிருந்து செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை என்ற விமர்சனம் அவர் மீது தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வழக்கமான அரசியல் நேர்காணலாக இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட மற்றும் பொழுதுபோக்கை மையப்படுத்திய ஒரு பிரபல டிவி நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கப் போகிறாராம்.

​இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் அரசியல் மட்டுமின்றி, சினிமா மற்றும் தனது தனிப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்தும் விஜய் ஜாலியாகவும் வெளிப்படையாகவும் பேச இருப்பதாகத் தெரிகிறது. ஒரு பிரபல பொழுதுபோக்கு சேனலில் மிக விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சி, விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. சீரியஸான அரசியலை விட எளிமையான முறையில் மக்களைச் சென்றடைய விஜய் கையாண்டுள்ள இந்த ‘மாஸ்’ வியூகம், தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.