உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பெண்ணின் தந்தை தனது மகளின் திருமணத்திற்காக சுமார் 5 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணின் புகுந்த வீட்டில் கூடுதல் வரதட்சணையாக 2 கோடி ரூபாய் மற்றும் தங்க நகைகளைக் கேட்டு சித்திரவதை செய்துள்ளனர்.

இதற்கெல்லாம் உச்சமாக, ஒரு நாள் நள்ளிரவில் அந்தப் பெண்ணின் மாமியார், குடும்பம் செல்வாக்கு பெற வேண்டும் என்பதற்காக ஒரு வினோதமான மாந்திரீக பூஜையை ஏற்பாடு செய்துள்ளார்.

அந்தப் பூஜையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நிர்வாணமாக அமர வேண்டும் என்றும், அப்போதுதான் செல்வம் பெருகும் என்றும் கூறி அந்தப் பெண்ணையும் நிர்வாணமாகுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவிக்கவே, கணவன் மற்றும் மாமனார் முன்னிலையில் அவரது ஆடைகளைக் வலுக்கட்டாயமாக களைந்துள்ளனர். பின்னர் ஒரு அறையில் பூட்டி வைத்து அவரை கொடூரமாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த கொடுமைகளைத் தாங்க முடியாமல் கடந்த ஜனவரி மாதம் தனது தந்தை வீட்டுக்குத் திரும்பிய அந்தப் பெண், நடந்தவற்றை விவரித்துள்ளார். தற்போது இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, மாமனார், மாமியார் மற்றும் கணவர் உள்ளிட்டோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் வருவதை அறிந்த அந்த குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.