அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது அவரது பெயரில் சர்வதேச விமான நிலையம் ஒன்று அமைய உள்ளது. புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தின் பெயரை, ‘ஜனாதிபதி டொனால்டு ஜே. டிரம்ப் சர்வதேச விமான நிலையம்’ என மாற்ற அந்த மாகாண கவர்னர் ரான் டிசேன்டிஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த அதிரடி மாற்றத்திற்கு டிரம்பின் மகனும் தொழிலதிபருமான எரிக் டிரம்ப், கவர்னர் மற்றும் அதிகாரிகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்த புதிய பெயர் மாற்றம் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வர உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம், விமான நிலையங்களின் பெயர் மாற்றத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும், இது அந்தந்த உள்ளூர் நிர்வாகம் சார்ந்த விஷயம் என்றும் கூறியுள்ளது.

இருப்பினும், பயண அட்டவணைகள் மற்றும் தகவல் தொகுப்புகளில் இந்தப் புதிய பெயரைப் புதுப்பிக்கும் பணிகளை மட்டும் தாங்கள் செய்து முடிக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.