தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருச்சி மேற்குத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கே என் நேரு இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின்படி தன்னிடம் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கமும் நான்கு வங்கி கணக்குகளில் சேர்த்து 64.86 லட்சம் ரூபாய் இருப்பும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வாகனங்களைப் பொறுத்தவரை நாற்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்கள் அவரிடம் உள்ளன. நகைப் பட்டியலில் அமைச்சரிடம் பத்து சவரன் தங்க நகைகள் மட்டுமே உள்ள நிலையில் அவரது மனைவியிடம் 200 சவரன் நகைகள் இருப்பதாகவும் அதன் சந்தை மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக கே என் நேருவிடம் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளும் அவரது மனைவியிடம் இரண்டு கோடியே முப்பத்தி ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளும் இருப்பதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசையா சொத்துக்களின் விவரப்படி திருச்சி மாவட்டத்தில் அமைச்சரின் பெயரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய நிலங்களும் அவரது மனைவியின் பெயரில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களும் உள்ளன.
பல்வேறு ஊழல் புகார்கள் மற்றும் அரசியல் விமர்சனங்களுக்கு மத்தியிலும் திருச்சி மேற்குத் தொகுதியில் மூன்றாவது முறையாக அவர் களம் காண்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கிடையே திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் களம் இறங்குவது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியுடன் சேர்த்து இரண்டாவதாகத் திருச்சி கிழக்குத் தொகுதியிலும் விஜய் போட்டியிடுவதாக வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்த மாவட்டத் தேர்தல் களத்தைச் சூடுபடுத்தியுள்ளது. அமைச்சர் கே என் நேருவின் சொந்த மாவட்டத்திலேயே விஜய் போட்டியிட உள்ளதால் அங்குப் பதிவாகும் வாக்குகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
