ஒவ்வொரு தேர்தலின் போதும் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். தற்பொழுது சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்கத் தேர்தல் ஆணையம் ஒரு வினோதமான ஏற்பாட்டைச் செய்துள்ளது. இளைஞர்கள் அதிக அளவில் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கேரள மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் இதற்காக வாக்கு இனிக்கும் கேரளா இயக்கம் என்ற சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்படி அந்தந்த மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் முதன்முறை வாக்காளர்களுக்கு இருநூறு பாக்கெட் அல்வா வழங்கப்பட உள்ளது.

இதற்கான அல்வா பாக்கெட்டுகள் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த இனிப்பு வழங்கும் பணியால் தேர்தல் நடைமுறைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றும் தேவைப்பட்டால் தன்னார்வலர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் ஓட்டு போடும் இளைஞர்களுக்கு இனிப்பான அனுபவத்தைத் தர கேரளா எடுத்துள்ள இந்த முயற்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.