பொதுவாகப் பெண்கள் தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழவும், அடுத்தடுத்த பிறவிகளிலும் அதே கணவர் கிடைக்க வேண்டும் என்றும் வரம் கேட்பது வழக்கம். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் ஒரு நபர் தனது மனைவியிடமிருந்து விடுபட வேண்டி கடவுளிடம் நேர்த்திக்கடன் வைத்து, அது நிறைவேறியதற்காக 9 கிலோமீட்டர் தூரம் தரையில் புரண்டே (அங்கப்பிரதட்சணம்) சென்று தனது நேர்த்திக்கடனைச் செலுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் சோனாஹா பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எனினும், திருமணமான சில நாட்களிலேயே கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சுரேஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.

மனைவியிடமிருந்து எப்படியாவது பிரிந்துவிட வேண்டும் என விரும்பிய சுரேஷ், தனது கிராமத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயிலுக்குச் சென்று ஒரு வினோத வேண்டுதலை வைத்துள்ளார். “தாயே, எனது மனைவியிடமிருந்து எனக்கு விடுதலை கிடைத்துவிட்டால், எனது கிராமத்திலிருந்து உனது சந்நிதி வரை தரையில் புரண்டு வந்தே நேர்த்திக்கடன் செலுத்துகிறேன்” என அவர் வேண்டியுள்ளார்.

 


வேண்டுதல் வைத்த சில நாட்களிலேயே, எதிர்பாராத விதமாக சுரேஷின் மனைவி அவரைப் பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது. தனது கோரிக்கை நிறைவேறியதாகக் கருதிய சுரேஷ், அதற்காகத் தனது நேர்த்திக்கடனைச் செலுத்த முடிவு செய்தார்.

உணவு, நீர் ஏதுமின்றி தனது கிராமத்திலிருந்து அம்மன் கோயில் வரை சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தை உடலைத் தரையில் உருட்டியபடியே கடந்துள்ளார். இந்த நெடும்பயணத்தில் அவரது முழங்கால்கள் மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்ட போதிலும், எதற்கும் அஞ்சாமல் விடாமுயற்சியுடன் கோயில் சந்நிதியை அடைந்து அம்மனை வழிபட்டார். இந்த விசித்திரமான வேண்டுதல் மற்றும் நேர்த்திக்கடன் குறித்த செய்தி அந்தப் பகுதியில் காட்டுத்தீ போல பரவி, தற்போது சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.