மகாராஷ்டிரா மாநிலம் தபோலி பகுதியில், 7 மாதக் குழந்தைக்குச் சளி மற்றும் இருமல் இருப்பதாகக் கருதி ஒரு மாதமாகச் சிகிச்சை அளித்து வந்த பெற்றோருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. மருந்துகள் கொடுத்தும் குணமாகாததால் எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே பரிசோதனையில், அந்தக் குழந்தையின் தொண்டையில் ஒரு சேஃப்டி பின் (Safety Pin) திறந்த நிலையில் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது. ஒரு மாத காலமாகக் குழந்தை அந்த வலியால் துடிததுக் கொண்டிருந்தது தெரிய வந்ததும், உடனடியாக வாலவல்கர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மருத்துவமனையில் நடத்தப்பட்ட தீவிர அறுவை சிகிச்சையில், உணவுக்குழாய் வரை சென்றிருந்த அந்த ஊசியை மருத்துவர்கள் லாவகமாக வெளியே எடுத்தனர். ஒருவேளை அந்த ஊசி உணவுக்குழாயைக் கிழித்திருந்தால் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகி இருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். “சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஊசி, காசு, சிறிய விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும்” என மருத்துவர்கள் பெற்றோர்களுக்கு இந்தச் சம்பவத்தின் மூலம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
