தமிழக அரசியலில் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 29) 17 வேட்பாளர்கள் கொண்ட அதிமுகவின் இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் பல முன்னாள் அமைச்சர்களுக்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும், சில முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு சீட் மறுக்கப்பட்டு புதிய முகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ தூசி மோகன், தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்து அதிரடியாக அதிமுகவிலிருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தவெக சார்பில் இன்று வெளியிடப்பட்ட முழு வேட்பாளர் பட்டியலில், செய்யாறு தொகுதியில் போட்டியிட தூசி மோகனுக்கு தவெக தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளே தவெக-விற்குத் தாவுவது, எடப்பாடி பழனிசாமிக்குச் சற்றுப் பின்னடைவாகவும், நடிகர் விஜய்யின் கட்சிக்குக் கூடுதல் பலமாகவும் பார்க்கப்படுகிறது.
