திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தண்ணீர் வாளியில் தவறி விழுந்து இரண்டு வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கங்கன்தொட்டி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாபு மற்றும் லதா தம்பதியினரின் மகன் தர்சன், நேற்று மதியம் வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நிரம்பிய வாளியில் எதிர்பாராதவிதமாக குழந்தை தலைகுப்புற விழுந்துள்ளான். வீட்டு வேலைகளில் மூழ்கியிருந்த தாய், நீண்ட நேரம் கழித்து வந்து பார்த்தபோது குழந்தை வாளியில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார்.

மேலும் உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், தர்சன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு நிமிடம் கவனக்குறைவாக இருந்ததால் பிஞ்சு உயிர் பறிபோனது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.