மலேசியாவில் ஒரு வீட்டின் மேற்கூரையை உடைத்துக்கொண்டு மூன்று பிரம்மாண்ட மலைப்பாம்புகள் கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை உறைய வைத்துள்ளது.

மலேசியாவில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு, கடந்த சில நாட்களாக வீட்டின் மேற்கூரையிலிருந்து விசித்திரமான சத்தங்கள் கேட்டுள்ளன. இதனால் சந்தேகமடைந்த உரிமையாளர்கள், பாம்பு பிடி வீரர்களுக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் சோதனையிட்டபோது, மேற்கூரையின் இடுக்குகளுக்கு இடையே மலைப்பாம்பின் வால் பகுதி மட்டும் வெளியில் நீட்டிக்கொண்டிருந்தது.

பாம்பு பிடி வீரர்கள் அந்தப் பாம்பைப் பிடித்து கீழே இழுக்க முயன்றனர். ஆனால், பாம்பின் அதீத பலம் மற்றும் எடையின் காரணமாக அதை எளிதில் வெளியே எடுக்க முடியவில்லை. அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரை ஒட்டுமொத்தமாக இடிந்து விழுந்தது. அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒன்றல்ல, இரண்டல்ல.. மூன்று ராட்சத மலைப்பாம்புகள் கீழே விழுந்தன.

கீழே விழுந்த பாம்புகளின் பிரம்மாண்ட உருவத்தைப் பார்த்த அங்கிருந்த மக்கள் பயத்தில் அலறியடித்து ஓடினர். “ஒருவேளை இந்த பாம்புகள் தூங்கிக்கொண்டிருக்கும் எவரேனும் ஒருவரின் மீது விழுந்திருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்?” என்று சமூக வலைதளங்களில் பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் வெப்பமண்டல காடுகள் அதிகம் என்பதால், இதுபோன்ற ராட்சத பாம்புகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை தற்போது வரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். “இந்த பாம்புகள் ஒரு மனிதனை அப்படியே விழுங்கும் திறன் கொண்டவை, அந்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.