ஹாங்காங்கிலிருந்து லண்டன் நோக்கிச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் (BA32) விமானத்தில், 60 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே உயிரிழந்தார். சர்வதேச விமான விதிமுறைப்படி, உயிரிழப்பு ஏற்பட்டால் அதை மருத்துவ அவசரநிலையாகக் கருத முடியாது என்பதால், விமானத்தைத் திசைதிருப்பாமல் லண்டன் நோக்கிய பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் உடலை எங்கோ வைப்பது எனத் தெரியாமல், விமானத்தின் பின்புறம் உணவு தயாரிக்கப்படும் ‘கேலி’ (Galley) பகுதியில் போர்வை போர்த்தி வைத்துள்ளனர். ஆனால், அந்த இடத்தின் தரைப்பகுதி சூடாக இருக்கும் என்பதை மறந்துவிட்டதால், 13.5 மணி நேரப் பயணத்தின் முடிவில் சடலம் அழுகி கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது.
விமானம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை நெருங்கும்போது, அந்தத் துர்நாற்றம் தாங்க முடியாமல் மற்ற பயணிகள் மற்றும் பணியாளர்கள் மூக்கை பொத்திக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். விமானம் தரையிறங்கியதும் காவல்துறையினர் உள்ளே வந்து விசாரணை நடத்தியதால், மற்ற 331 பயணிகளும் 45 நிமிடங்கள் இருக்கையிலேயே சிறைபட்டுக் கிடந்தனர்.
விதிமுறைப்படிதான் அனைத்தும் நடந்ததாக ஏர்லைன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்தாலும், உணவு தயாரிக்கும் இடத்திற்கு அருகில் சடலத்தை வைத்ததும், அது வெப்பத்தினால் துர்நாற்றம் வீசியதும் பயணிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் வானில் நடப்பது மிகவும் அரிது என்றாலும், இந்த முறையற்ற கையாளுதல் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
