தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், ஆளுங்கட்சி மீது அடுக்கடுக்கான ஊழல் மற்றும் நிர்வாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் ஆட்சி நடக்கவில்லை; விரல் விட்டு எண்ணக்கூடிய சில அதிகாரிகளின் ஆட்சிதான் நடக்கிறது. சட்டசபையில் ஆட்சி மாறியிருக்கிறது, ஆனால் காட்சி மாறவில்லை” என்று வேல்முருகன் சாடியுள்ளார்.
லஞ்ச ஊழல்களை தான் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவேன் என்ற அச்சத்தில், அதிகாரிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு திமுக தன்னை கூட்டணியை விட்டு வெளியேற்றியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுப்பது ஏன்? வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்த விடாமல் தடுக்கும் அந்த சமூகநீதிக்கு எதிரான சக்திகள் யார்?” என முதல்வர் ஸ்டாலினுக்கு நேரிடையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் சமூகத்திற்காகப் போராடிய வீரர்களுக்கு மணிமண்டபம் கட்டச் சொன்னால் மௌனம் காக்கும் அரசு, ஒரு சினிமா நடிகர் கேட்டார் என்பதற்காக அவர் தந்தையின் பெயரில் தெருக்களுக்குப் பெயரிடுவது என்ன நியாயம்?” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
திமுக-வின் முக்கிய ஓட்டு வங்கியாகக் கருதப்படும் வடதமிழகத்தில், வேல்முருகனின் இந்த வெளியேற்றம் மற்றும் விமர்சனங்கள் திமுக-வுக்குப் பின்னடைவை ஏற்படுத்துமா என்ற விவாதம் கிளம்பியுள்ளது.
