ராமநாதபுரம் த.வெ.க. கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில், திருப்புல்லாணி அருகே உள்ள சுமைதாங்கி கிராமத்தில் அக்கட்சியினர் அண்மையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளில் விஜய் படத்துடன் கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன், அங்குள்ள சிறுவர்களை அழைத்து ‘தி.மு.க. ஒரு தீய சக்தி’ என்பது போன்ற அரசியல் முழக்கங்களை எழுப்பச் செய்துள்ளனர்.
சிறுவர்களை வைத்து அரசியல் பிரச்சாரம் செய்த இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, மலர்விழி ஜெயபாலா உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளைப் பயன்படுத்துதல், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
