ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தற்போது உலக நாடுகளையே உலுக்கி வரும் நிலையில், இந்த மோதலால் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, ஈரான் ‘ஹார்முஸ்’ நீரிணைப் பகுதியை மூடியதால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டுள்ளது.

அமெரிக்கா தனது முடிவுகளால் சொந்த காலிலேயே சூனியம் வைத்துக்கொண்டது மட்டுமன்றி, அதன் ஆதிக்கத்தால் வளைகுடா நாடுகளின் நிம்மதியும் பறிபோயுள்ளது. ஈரான் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிவாயு திட்டங்கள் மீது ஈரான் நடத்திய அதிரடித் தாக்குதல்கள் மத்திய கிழக்குப் பகுதியை நிலைகுலையச் செய்துள்ளன.

​மறுபுறம், இஸ்ரேல் தனது தாக்குதல் எல்லையை ஈரான் தாண்டி சிரியா மற்றும் ஈராக் வரை விரிவுபடுத்தியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தெற்கு சிரியாவில் உள்ள ராணுவத் தளங்கள் மற்றும் கட்டளை மையங்கள் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இரவு நேரத்தில் நடத்திய பயங்கர குண்டுவீச்சு, அந்தப் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் சீனா, ரஷ்யா, பிரிட்டன் போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு உதவ மறுத்து கழன்றுகொண்ட நிலையில், இஸ்ரேலின் இந்த அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள் ஒரு மிகப்பெரிய உலகப் போருக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.