இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தனது அனுமதி இன்றி தனது பெயர், புகைப்படம் மற்றும் குரலைச் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் தன்னை அவதூறு செய்யும் வகையிலும், தான் கூறாத கருத்துக்களைக் கூறியது போன்றும் போலியான வீடியோக்கள் பரப்பப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறிப்பாக, தான் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாகப் பரப்பப்பட்ட ஒரு போலி வீடியோ சுமார் 29 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளதாகவும், இது தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் தனது ‘ஆளுமை உரிமைகளை பாதுகாக்கக் கோரியுள்ள கம்பீர், சம்பந்தப்பட்ட 16 சமூக வலைதளக் கணக்குகள் மற்றும் இ-காமர்ஸ் தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தனது அடையாளத்தை வருமானம் ஈட்டுவதற்காகவும், தவறான தகவல்களைப் பரப்புவதற்காகவும் ஆயுதமாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்காக ரூ.2.5 கோடி இழப்பீடு கோரியுள்ள அவர், அனுமதியின்றி தனது உருவத்தைப் பயன்படுத்தி விற்கப்படும் டீ-சர்ட்டுகள் மற்றும் போஸ்டர்களைத் தடை செய்யவும், சர்ச்சைக்குரிய வீடியோக்களை உடனடியாக நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.