ஹரியானா மாநிலம் குருகிராமில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான கணவன், தனது மனைவியான இளம் செவிலியருக்கு விஷ ஊசி போட்டுப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த காஜல் என்ற இளம் பெண் குருகிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். அங்கு எக்ஸ்ரே தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றிய காசியாபாத்தைச் சேர்ந்த அருண் சர்மா என்பவருடன் காஜலுக்குக் காதல் மலர்ந்தது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணமான சில நாட்களிலேயே அருண் சர்மாவின் போதைப் பழக்கம் காஜலுக்குத் தெரியவந்தது. போதைக்கு அடிமையானதால் அருண் தனது வேலையையும் இழந்தார். போதைப்பொருள் வாங்கக் காஜலிடம் அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செய்ததோடு, பணம் தராதபோது அவரை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இந்தத் தொல்லை பொறுக்க முடியாமல் காஜல் தனது தாய் வீட்டிற்குச் சென்று வசித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அருண் சமாதானம் பேசி காஜலுடன் அங்கேயே தங்கியுள்ளார்.

கடந்த மார்ச் 18-ஆம் தேதி காலை, ஏதோ ஒரு காரணத்தைக் கூறி காஜலை வீட்டின் கீழ்த்தளத்திற்கு அருண் அழைத்துள்ளார். கீழே சென்ற 10 நிமிடங்களிலேயே காஜலின் உடல்நிலை மோசமடைந்து மூக்கிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் காஜல் இறந்துவிட்டதை அறிந்தவுடன் அருண் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார் வீட்டைச் சோதனையிட்டபோது, குளியலறையில் பயன்படுத்தப்பட்ட ஊசிஒன்றைக் கைப்பற்றினர். அருண் தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி காஜலுக்கு ஏதோ ஒரு நச்சு ஊசியைச் செலுத்தி கொலை செய்திருப்பதாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே காஜலுக்கு என்ன மாதிரியான விஷம் செலுத்தப்பட்டது என்பது தெரியவரும். தப்பியோடிய கணவன் அருண் சர்மாவைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். திருமணமான 4 மாதங்களிலேயே கணவனே மனைவியைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.