கேரள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, கொச்சியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் விடுத்துள்ள வினோதமான கோரிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில், மார்ச் 29-ம் தேதி தனக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும், ஏப்ரல் 7 முதல் 11-ம் தேதி வரை தனது கணவருடன் தேனிலவு செல்ல ஏற்கனவே திட்டமிட்டு முன்பதிவு செய்துள்ளதாகவும் அந்த ஆசிரியை தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் அதே காலகட்டத்தில் தனது தேனிலவு பயணம் அமைவதால், தேர்தல் பணியை வழங்கி தனது மகிழ்ச்சியான திட்டத்தை கெடுத்துவிட வேண்டாம் என்று அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் திருவனந்தபுரம் இன்போபார்க்கில் பணியாற்றும் இளைஞருக்கும், கொச்சி அருகே காக்கநாட்டில் ஆசிரியையாகப் பணிபுரியும் அந்தப் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தேனிலவுக்காக வெளிமாநிலங்களுக்குச் செல்ல பயணச்சீட்டு மற்றும் தங்கும் விடுதிகளை ஏற்கனவே பதிவு செய்துள்ள நிலையில், தேர்தல் அறிவிப்பு அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றபோது, ஆட்சியர் அங்கு இல்லாததால் அலுவலக ஊழியர்களிடம் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார். தனது வாழ்வின் முக்கிய தருணமான தேனிலவுப் பயணம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அந்த ஆசிரியை, விரைவில் ஆட்சியரை நேரில் சந்தித்து விலக்கு கோரத் திட்டமிட்டுள்ளார்.