இரும்புத்திரை நாடு என்று அழைக்கப்படும் வடகொரியாவில் இருந்து வெளியாகும் செய்திகள் எப்போதும் அதிர்ச்சியையும், மர்மத்தையும் கொண்டிருப்பவை. இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் பியான்யாங்கில் படமாக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் (@matt.and.julia) பகிரப்பட்ட அந்த வீடியோவில், வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் வடகொரியாவின் வீதிகளில் உள்ளூர் மக்களுடன் அச்சமின்றி உரையாடுவதைக் காண முடிகிறது. அந்தப் பெண் அங்கிருந்த ஒரு வடகொரியப் பெண்ணிடம், “நீங்கள் எந்த நாட்டிற்குப் பயணம் செய்ய விரும்புகிறீர்கள்?” என்று கேட்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Matt and Julia (@matt.and.julia)

அதற்கு அந்த வடகொரியப் பெண் புன்னகையுடன், “ரஷ்யா” என்று பதிலளிக்கிறார். உடனே அந்தப் பயணி, “ரஷ்யாவிற்கு வாருங்கள், எனது எண்ணைத் தருகிறேன்” என்று கூறுகிறார். வடகொரியாவின் கடும் சட்டதிட்டங்களின்படி, அந்நாட்டு மக்கள் வெளிநாட்டினருடன் பழகுவதோ அல்லது வெளிநாட்டு கலாசாரத்தைப் பின்பற்றுவதோ பெரும் குற்றமாகக் கருதப்படும் நிலையில், இந்த உரையாடல் உலகெங்கும் உள்ள இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் அந்த வீடியோவில், பல வடகொரியர்கள் சீனா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளுக்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். இணைய வசதி மற்றும் வெளியுலகத் தொடர்புகள் முற்றிலும் முடக்கப்பட்ட ஒரு நாட்டில் வாழும் சாதாரண குடிமக்களுக்கு, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து பற்றி எப்படித் தெரியும் என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அதன் உண்மைத்தன்மை குறித்து இணையத்தில் பெரும் விவாதம் கிளம்பியுள்ளது. வடகொரியாவில் வெளிநாட்டினருடன் பேசுவது தடை செய்யப்பட்ட ஒன்று. அப்படியிருக்கையில், கேமரா முன்னால் மக்கள் இவ்வளவு இயல்பாகப் பேசுவது எப்படி? வடகொரியாவில் எல்லாம் சாதாரணமாக இருக்கிறது என்பதைக் காட்ட, அந்நாட்டு அரசாங்கமே திட்டமிட்டு நடத்திய ஒரு விளம்பர வீடியோவாக (இது இருக்கலாம் எனப் பல பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வடகொரியாவின் மர்மமான பிம்பத்தை மாற்றும் முயற்சியாக இது பார்க்கப்பட்டாலும், இதன் நம்பகத்தன்மை குறித்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.