ஐபிஎல் 2026 தொடர் நெருங்கி வரும் வேளையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். லண்டனில் சமீபத்தில் நடைபெற்ற ‘தி ஹண்டர்ட்’ (The Hundred) லீக் ஏலத்தில், காவ்யா மாறனுக்குச் சொந்தமான ‘சன்ரைசர்ஸ் லீட்ஸ்’ அணி, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை ஏலத்தில் எடுத்ததுதான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம். இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான கிரிக்கெட் உறவு சுமுகமாக இல்லாத நிலையில், ஒரு பாகிஸ்தான் வீரரை காவ்யா மாறன் வாங்கியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் சமூக வலைதளங்களில் காவ்யா மாறனுக்கு எதிராகக் கடுமையான கருத்துக்களைப் பதிவிட்டு வருவதுடன், அவரை ‘தேச துரோகி’ என்றும் விமர்சித்து வருகின்றனர்.

​இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி தலைவர் ஜெய் ஷா, காவ்யா மாறனுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அப்ரார் அகமதுவை உடனடியாக அணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீது ஐபிஎல் போட்டிகளில் தடை விதிக்கப்படும் என்றும் ஜெய் ஷா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தகவல் முற்றிலும் வதந்தி என்றும், ஜெய் ஷா இது தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும் ஒரு தரப்பினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், வெளிநாட்டு லீக் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்களை வாங்குவது அந்தந்த அணிகளின் தனிப்பட்ட விருப்பம் என்றும், அதில் தாங்கள் தலையிட முடியாது என்றும் பிசிசிஐ (BCCI) தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.