‘தி ஹண்டர்ட்’ (The Hundred) லீக் ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை 2.30 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் காவ்யா மாறன். இந்திய ரசிகர்கள் ஒருபுறம் பாகிஸ்தான் வீரரை வாங்கியதற்காகக் காவ்யா மாறனை வறுத்தெடுத்து வரும் நிலையில், தற்போது அந்த வீரர் தொடரில் விளையாடுவதற்கே சிக்கல் எழுந்துள்ளது. பாகிஸ்தான் அணி அதே காலக்கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடவுள்ளது. அப்ரார் அகமது பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் முக்கிய வீரர் என்பதால், அவர் ‘தி ஹண்டர்ட்’ லீக் தொடரைத் தவிர்த்துவிட்டு வெஸ்ட் இண்டீஸ் செல்லவே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
காவ்யா மாறனின் ‘சன்ரைசர்ஸ் லீட்ஸ்’ அணி மற்ற அணிகளுடன் போட்டி போட்டு அதிக விலை கொடுத்து அப்ரார் அகமதுவை வாங்கியது. ஆனால், தற்போது அவர் விளையாட வரமாட்டார் என்ற செய்தி சன்ரைசர்ஸ் நிர்வாகத்திற்குப் பெரும் இடியாக இறங்கியுள்ளது. அணியின் பயிற்சியாளர் டேனியல் விட்டோரி இந்த விவகாரத்தைச் சமாளிக்க முயன்றாலும், ரசிகர்களின் அதிருப்தி குறைந்தபாடில்லை. “இந்தியாவே பாகிஸ்தானைப் புறக்கணிக்கும் போது, எதற்கு இவ்வளவு கோடி கொடுத்து அவரை வாங்க வேண்டும்?” எனக் கேட்ட ரசிகர்களுக்கு, தற்போது அப்ரார் அகமது விளையாட முடியாமல் போவது ஒருவகையில் ‘ஆறுதல்’ செய்தியாகவே அமைந்துள்ளது. காவ்யா மாறன் எடுத்த இந்த விபரீத முடிவு இறுதியில் அவருக்கே அனுகூலமாக முடியுமா அல்லது நஷ்டத்தில் முடியுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
