இந்திய ரயில்வேயில் சமீபகாலமாக சில பயணிகளின் அநாகரீகமான செயல்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஓடும் ரயிலின் ஜன்னல் வழியாக ஒரு பெண் தன் குழந்தையை வெளியே பிடித்து சிறுநீர் கழிக்க வைக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

மேலும் ரயிலில் கழிவறை வசதிகள் இருந்தபோதிலும், பொது இடத்திலும் சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், ரயிலின் தூய்மையைக் கெடுக்கும் வகையிலும் அந்தப் பெண் நடந்து கொண்டது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் பொறுப்பற்ற செயலுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

“>

இந்தச் செயல் அநாகரீகமானது மட்டுமல்லாமல், மிகவும் ஆபத்தானது என்று நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஓடும் ரயிலின் ஜன்னல் ஓரத்தில் குழந்தையை அப்படிப் பிடித்துக் கொள்வது பெரும் விபத்துக்கு வழிவகுக்கும் என்றும், பொது இடங்களில் சுகாதாரத்தைப் பேண வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் ரயில்வே நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட பெண்ணைக் கண்டறிந்து அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்து வரும் வேளையில், இது போன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே இன்னும் விழிப்புணர்வு தேவை என்பதையே காட்டுகிறது.