தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி ஆகியவற்றுடன் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவையும் களம் காண்பதால் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

இத்தகைய அரசியல் பரபரப்புகளுக்கு இடையே கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான நூறுக்கு ஒரு பெண் அழைப்பு விடுத்துள்ளார். அதில் பேசிய அந்தப் பெண் தனக்குத் தமிழக வெற்றிக் கழகத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்க மறுப்பதாகவும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி காவல்துறையினரையே அதிர வைத்துள்ளார்.

இந்தத் தகவலின் அடிப்படையில் கிணத்துக்கடவு காவல்துறையினர் அந்தப் பெண்ணின் இருப்பிடத்தைக் கண்டறிந்து நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பெண் மது போதையில் இருந்ததும் போதை மயக்கத்திலேயே காவல்துறையினரை அழைத்து இத்தகைய விநோதமான கோரிக்கையை முன்வைத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் அந்தப் பெண்ணைக் கடுமையாக எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் கட்சியிடம் சீட் வாங்கித் தருமாறு குடிபோதையில் ஒரு பெண் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.