திரையுலகின் உயரிய விருதான 98-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இன்று (மார்ச் 16) கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஸ்பெயின் நாட்டின் பிரபல நடிகர் ஜாவியர் பார்டம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார்.

விருது விழாவைத் தொகுத்து வழங்கிய ஜாவியர் பார்டம், தனது உரையின் இடையே திடீரென, “போர் வேண்டாம்… பாலஸ்தீனத்திற்கு விடுதலை அளிப்பீர்!” (No to War and Free Palestine) என்று முழக்கமிட்டார். அவரது இந்தத் துணிச்சலான பேச்சைக் கேட்டதும், அங்கிருந்த உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் அனைவரும் எழுந்து நின்று பலத்த கைதட்டல்களை எழுப்பினர்.

அப்போது அவருடன் மேடையிலிருந்த இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா, பார்டமின் கருத்தை வரவேற்கும் விதமாகப் புன்னகையுடன் தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக, கடந்த மூன்று ஆண்டுகளாக இஸ்ரேல் ராணுவம் காசா மற்றும் ராபா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தது. இந்தத் தொடர் போரில் இதுவரை 70,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் தலையீட்டால் கடந்த 2025 அக்டோபரில் போர் நிறுத்தம் ஏற்பட்ட போதிலும், அவ்வப்போது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உலகமே உற்றுநோக்கும் ஆஸ்கார் மேடையில், அரசியல் ரீதியாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஜாவியர் பார்டம் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.