இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஆண்டுதோறும் வழங்கும் ‘நமன்’ விருதுகள் வழங்கும் விழா, இந்த ஆண்டு நாட்டின் தலைநகரான புது தில்லியில் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த ஓராண்டில் ஐசிசி (ICC) கோப்பைகளை வென்று சாதனை படைத்த ஐந்து இந்திய அணிகள் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டன. இருப்பினும், விழாவின் போது பிசிசிஐ செய்த சில முக்கிய தவறுகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
2025-26 காலப்பகுதியில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியதற்காக சுப்மன் கில் சிறந்த ஆடவர் வீரராகவும், ஸ்மிருதி மந்தனா சிறந்த மகளிர் வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகளைப் பெற்றனர். வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் முன்னாள் வீரர்கள் ரோஜர் பின்னி, ராகுல் டிராவிட் மற்றும் மகளிர் கிரிக்கெட் நட்சத்திரம் மிதாலி ராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
உலகக்கோப்பைகளை வென்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் மற்றும் ஆடவர் அணிகள், 2025 சாம்பியன்ஸ் ட்ராபி வென்ற அணி, 2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2026 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிகள் மேடையில் கௌரவிக்கப்பட்டன.
இந்த நிலையில் விழாவின் முதல் குளறுபடியாக, 2025-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணியினரை மேடைக்கு அழைத்தபோது, திரையில் அந்த வீராங்கனைகளின் புகைப்படத்திற்கு பதிலாக ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சீனியர் மகளிர் அணியின் புகைப்படம் காட்டப்பட்டது. நீண்ட நேரமாக இந்தத் தவறு திருத்தப்படாமல் இருந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
🚨 BREAKING 🚨
BCCI deleted this post showing Shubman Gill as Champions Trophy captain instead of Rohit Sharma after backlash. https://t.co/YMJyIBWDl6 pic.twitter.com/QWfracPoaf
— Mention Cricket (@MentionCricket) March 15, 2026
அடுத்ததாக நடந்த மிகப்பெரிய தவறு சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியது. சாம்பியன்ஸ் ட்ராபி வென்ற கேப்டன் ரோஹித் சர்மா இவ்விழாவில் கலந்து கொள்ளாததால், அவருக்குப் பதிலாக துணை கேப்டன் சுப்மன் கில் மேடையில் கலந்து கொண்டார். அப்போது திரையின் கீழ் ஓடிய பெயர்ப்பலகையில் சுப்மன் கில்லின் பெயருக்கு முன்னால் “சாம்பியன்ஸ் ட்ராபி வென்ற கேப்டன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைப் பார்த்த ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் கடும் கொதிப்படைந்தனர். பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இந்த வீடியோவைப் பதிவிட்டபோதும் இதே தவறு தொடர்ந்தது. பின்னர் ரசிகர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பிசிசிஐ ஊடகக் குழு அந்தத் தவறைத் திருத்தியது.
மேலும் விருது விழாவிற்கு இடையே, இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், தனது சிறுவயது தோழியைத் திருமணம் செய்து கொண்ட வீடியோவும் திரையிடப்பட்டு, அவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
