தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய்யை, சிபிஐ அமைப்பைப் பயன்படுத்தி பாஜக மிரட்டுவதாகவும், அதன் மூலம் அவரைத் தங்களது கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக, கரூர் விபத்து தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “இது பழிவாங்கும் நடவடிக்கை” எனத் தமிழக காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இதற்கு பாஜகவின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அதிரடியான விளக்கம் அளித்துள்ளார்.

​”அரசு அமைப்புகளைப் பயன்படுத்தி விஜய்யை பாஜக மிரட்டுகிறது என்பது சுத்தப் பொய்; இதில் எள்ளளவும் உண்மையில்லை” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “தவெக-வுக்கு எந்தவித நெருக்கடியும் நாங்கள் கொடுக்கவில்லை. கூட்டணி அமைப்பதற்கு பாஜகவின் கோடிக்கணக்கான தொண்டர்களின் பலமே போதும். வேறு எந்த மிரட்டலும் எங்களுக்குத் தேவையில்லை” எனத் தெறிக்கவிட்டுள்ளார். 2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ‘விஜய் கூட்டணி யாருடன்?’ என்கிற கேள்விக்கு மத்தியில், பொன். ராதாகிருஷ்ணனின் இந்தப் பேச்சு மீண்டும் விவாதத்தை ஊதிப் பெரிதாக்கியுள்ளது.