தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியைத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், புதிய சாலைத் திட்டங்களைத் தொடங்குதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களைத் தவிர்த்து, அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதையும் அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும்.
அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது

அரசு வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் அரசு அலுவலகங்களைத் தேர்தல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது.

அரசின் சாதனைகளை விளக்கிப் பொதுப்பணத்தில் செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யத் தடை விதிக்கப்படுகிறது.

அரசு கட்டடங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் விளம்பரங்கள் மற்றும் புகைப்படங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

பிரசாரத்தின்போது எதிர்க்கட்சிகளின் கொள்கைகளை மட்டுமே விமர்சிக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை அல்லது குடும்பத்தைப் பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும்.

வாக்கு சேகரிக்கச் சாதி அல்லது மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசுவதோ, வழிபாட்டுத் தலங்களைப் பிரசாரத்திற்குப் பயன்படுத்துவதோ கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை அல்லது தகுதி நீக்கம் செய்யப்படும்.

பொது மைதானங்கள் மற்றும் தங்குமிடங்களைப் பயன்படுத்துவதில் ஆளுங்கட்சிக்கு நிகராக மற்ற கட்சிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்.

பொதுமக்கள் ரூ. 50,000-க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் சென்றால் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், அச்சுறுத்தல், ஆள்மாறாட்டம் செய்தல் ஆகியவை தேர்தல் சட்டப்படி குற்றமாகும்.

வாக்குச் சாவடிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்குச் சேகரிக்கக் கூடாது. வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே பொதுக் கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

மேலும் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யத் தேர்தல் ஆணையம் இந்த விதிகளைக் கடுமையாகப் பின்பற்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது.