ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக், ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக ஆர்சிபி அணியின் ‘ஆல்-டைம் லெவன்’ அணியைத் தேர்வு செய்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த அணியில் கிறிஸ் கெய்ல் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோரைத் தொடக்க வீரர்களாகவும், நட்சத்திர வீரர் விராட் கோலியை மூன்றாவது இடத்திலும் அவர் வைத்துள்ளார்.
மேலும் ஏபி டி வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்கள் அணியில் இருந்தபோதிலும், தினேஷ் கார்த்திக் தனது அணியின் கேப்டனாக ரஜத் படிதாரைத் தேர்ந்தெடுத்துள்ளார். 2025-ஆம் ஆண்டு ஆர்சிபி அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றதில் படிதாரின் தலைமைப்பண்பு மற்றும் பங்களிப்பு முக்கியமானது என்பதால், அவர் மிகவும் வெற்றிகரமான கேப்டன் என கார்த்திக் புகழ்ந்துள்ளார்.
இதனால் தினேஷ் கார்த்திக்கின் இந்தத் தேர்வு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நீண்ட காலம் அணியை வழிநடத்திய விராட் கோலியைத் தவிர்த்துவிட்டு ரஜத் படிதாருக்கு கேப்டன் பொறுப்பை வழங்கியது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. தினேஷ் கார்த்திக் தேர்வு செய்துள்ள இந்த அணியில் ஜித்தேஷ் சர்மா விக்கெட் கீப்பராகவும், கிருணால் பாண்டியா ஆல்-ரவுண்டராகவும் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பந்துவீச்சு வரிசையில் முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால், ஹர்ஷல் படேல் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த சீசனின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, பழைய ஜாம்பவான்களுடன் தற்போதைய சாம்பியன் வீரர்களையும் இணைத்து ஒரு சமநிலையான அணியை அவர் உருவாக்கியுள்ளார்.
