அசாம் மாநிலம் சில்காரில் (Silchar) இன்று ரூ. 23,550 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாகச் சாடினார். தேர்தல் மேல் தேர்தல்களில் தோல்வியடைந்து வரும் காங்கிரஸ், மிக விரைவில் “தோல்வியில் சதம் (Century of Defeats) அடிக்கும்” என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார். இந்தத் தொடர் தோல்விகளின் விரக்தியால், காங்கிரஸ் கட்சி இப்போது தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
”அசாம் இளைஞர்களை வன்முறை மற்றும் பயங்கரவாதத்தின் தீய சுழற்சிக்குள் சிக்க வைத்தது காங்கிரஸ் தான்” என ஆவேசமாகப் பேசிய மோடி, பாரத் மண்டபத்தில் நடந்த ‘ஷர்ட் இல்லாத போராட்டத்தை’ சுட்டிக்காட்டி காங்கிரஸ் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாகவும் கூறினார். வடகிழக்கு மாநிலங்களை டெல்லியிலிருந்தும், இதயத்திலிருந்தும் காங்கிரஸ் விலக்கி வைத்திருந்ததாகவும், ஆனால் பா.ஜ.க அரசு அந்தப் பகுதியை இந்தியாவின் வளர்ச்சி இயந்திரமாக மாற்றியுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
