ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு அந்த அணி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சமீபத்தில் ‘X’ தளத்தில் பயனர் ஒருவர் வெளியிட்ட பதிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பதிவில், “இந்த சீசனில் ரோகித் சர்மா சரியாக விளையாடாவிட்டால், அவருக்குச் சலுகைகள் வழங்கப்படாது என்று ஹர்திக் பாண்டியா நிர்வாகத்திடம் கூறியுள்ளார். கடந்த 10-12 ஆண்டுகளில் ரோகித்தின் ஆட்டம் திருப்திகரமாக இல்லை என்றும், அதிக சம்பளம் பெறும் அவர் சீசனுக்கு 200-300 ரன்கள் மட்டுமே எடுப்பது நிர்வாகத்திற்கு அதிருப்தி அளிப்பதாகவும்” அந்தப் பயனர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தத் தகவல் காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியாவின் ‘GIF’ ஒன்றைப் பகிர்ந்து, (இதெல்லாம் ஒரு பேச்சா / என்னங்க நீங்க!) என்று பதிவிட்டுள்ளது. இதன் மூலம் ரோகித் சர்மா குறித்து ஹர்திக் பாண்டியா எச்சரிக்கை விடுத்ததாகச் சொல்லப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்பதை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
Kuch bhi! 😂 https://t.co/lEiFBgaEoh pic.twitter.com/SYw1im5Mfi
— Mumbai Indians (@mipaltan) March 13, 2026
மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் மார்ச் 29-ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் ரோகித் சர்மா மும்பை அணிக்கு 5 முறை கோப்பையை வென்று தந்த வெற்றிகரமான கேப்டன். ஹர்திக் பாண்டியா 2024 முதல் அணியை வழிநடத்தி வரும் தற்போதைய கேப்டன் ஆவார்.
இரு வீரர்களும் இணைந்து இந்த முறை மும்பை அணிக்கு 6-வது முறையாகக் கோப்பையை வென்று தருவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
