உணவுப் பொருட்கள், ஆடைகள், மின்னணு சாதனங்கள் என அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டு வாசலிலேயே பெறும் வசதி இன்று சாதாரணமாகிவிட்டது. ஆனால், குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஒருவர், உயிரோடு இருக்கும் ஆட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் காய்கறிகள் முதல் கேப் (Cab) புக் செய்வது வரை அனைத்தும் கைபேசி செயலிகள் மூலமே நடைபெறுகின்றன. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ‘@log.kya.kahenge’ என்ற கணக்கில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், ஒரு நபர் ஆன்லைனில் ஆட்டை ஆர்டர் செய்து பெற்றுள்ளார். அந்த ஆட்டின் முதுகில் தபால் அல்லது கொரியர் சேவைக்கான பில்லிங் லேபிள் (Billing Label) ஒட்டப்பட்டிருப்பது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே சுமார் 2.5 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டு, லட்சக்கணக்கான லைக்குகளைக் குவித்துள்ளது. இந்த விவகாரம் இணையத்தில் இருவேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பினர், “டிஜிட்டல் இந்தியா அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டது, இது ஒரு வியக்கத்தக்க நிகழ்வு” என்று கருதுகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Logkyakahenge (@log.kya.kahenge)

அதே சமயம், மற்றொரு தரப்பினர் இதற்குத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “உயிருள்ள ஒரு விலங்கை, ஒரு பார்சலைப் போல கொரியர் முறையில் கையாள்வது மனிதாபிமானமற்ற செயல். தண்ணீர், உணவு ஏதுமின்றி அந்த ஆடு எவ்வளவு அவதிப்பட்டிருக்கும்? கொரியர் நிறுவனத்திற்கு விலங்குகளின் பாதுகாப்பு குறித்துத் தெரியாதா?” எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல இ-காமர்ஸ் தளங்களான அமேசான் அல்லது பிளிப்கார்ட் வழியாக இந்த ஆர்டர் செய்யப்பட்டதாகத் தகவல் பரவினாலும், இது குறித்த அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் எந்த நிறுவனத்திடமிருந்தும் வெளியாகவில்லை. சில பயனர்கள் இது வெறும் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட ‘பிராங்க்’ (Prank) வீடியோவாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், உயிரினங்களை ஆன்லைனில் விற்கவும், விநியோகம் செய்யவும் சட்டத்தில் இடமுண்டா என்ற கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.