தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவுக்கு சமீபத்தில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் திருமணம் நடைபெற்றது. இவர் கன்னட  சினிமாவில் வெளியான க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்த போது நடிகர் ரக்ஷித் செட்டியை காதலித்தார். இவர்கள் இருவரும் அப்போது நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில் திடீரென திருமணத்தை கேன்சல் செய்துவிட்டு பிரிந்தனர்.

இந்த நிலையில் தற்போது நடிகர் ராஷ்மிகா கீதா கோவிந்தம் படத்தில் நடித்த போது லிப்லாக் காட்சி அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ரக்ஷித் செட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் இனிமேல் ரஷ்மிகா படங்களில் நடிக்க கூடாது எனவும் இது தொடர்பாக அவரே அறிவிக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தியதாகவும் அதனால்தான் அவர் திருமணத்தை முறித்துக் கொண்டதாகவும் அவரது தாயார் இது தொடர்பாக விவாதம் நடத்தியதாகவும் ஒரு ஆடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

மேலும் இது தொடர்பாக தற்போது நடிகை ராஷ்மிகா முதல் முறையாக மௌனம் திறந்து கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில்,”கடந்த எட்டு ஆண்டுகளாக ஊடகங்களின் ஒரு பிரிவினராலும், சமூக வலைதளங்களில் உள்ள சில தனிநபர்களாலும் திட்டமிடப்பட்டு என் மீது அவதூறு பிரச்சாரங்களும், தனிப்பட்ட தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன. நான் பேசாத வார்த்தைகளைப் பேசியதாகத் திரித்துக் கூறி, என் மீதான வெறுப்பைச் சில தரப்பினர் பரப்பி வருகின்றனர்.

இதுவரை இதைப் பொறுமையுடன் கடந்து வந்தேன். ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்து எல்லைகளையும் கடந்துவிட்டன. சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு தனிப்பட்ட உரையாடல், தற்போது அதன் உண்மைத்தன்மை சிதைக்கப்பட்டு, சூழலுக்குப் புறம்பாக இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. இது எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்களுடன் திட்டமிட்டு இணைக்கப்படுகிறது.

“இந்த விவகாரத்தில் என்னைத் தாண்டி எனது குடும்பத்தினரும், எனக்கு நெருக்கமானவர்களும் தேவையில்லாமல் இழுக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இது ஒருவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் (Privacy) தலையிடும் செயலாகும். மற்றவர்களின் கண்ணியம் மற்றும் அமைதியைச் சீர்குலைத்து இன்பம் காணும் ஒரு சிலரின் செயல் துரதிர்ஷ்டவசமானது.”

“எனது மௌனத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம். தற்போது ஒரு எல்லையை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இத்தகைய அவதூறு வீடியோக்களையும், செய்திகளையும் பரப்பும் ஊடகங்கள், செல்வாக்கு மிக்க நபர்கள் (Influencers) மற்றும் தனிநபர்கள் உடனடியாக அவற்றை நீக்க வேண்டும்.

இந்த அறிக்கை வெளியான 24 மணி நேரத்திற்குள் அவதூறு உள்ளடக்கங்கள் நீக்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பவும் தயங்க மாட்டேன்,” என அவர் அந்த அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

மேலும், தனது தாய்மொழியான கன்னடத்தில் பதிவிட்டுள்ள அவர், “இவ்வளவு காலம் எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. எனது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது. எனது முடிவுகளை நானே எடுப்பேன்,” என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.