தமிழகத்தின் தலைநகரான சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிலிண்டர் கிடைக்காமல் திணறி வரும் பல சிறு ஹோட்டல்கள் வேறு வழியின்றி கடைகளை மூடி வருகின்றனர். இதனால் வேலைவாய்ப்பும், மக்கள் உணவருந்தும் சூழலும் கேள்விக்குறியாகியுள்ளது. பல பகுதிகளில் ஹோட்டல் வாசல்களிலேயே விறகு அடுப்புகளை மூட்டி சமைக்கும் காட்சிகள் சாதாரணமாகிவிட்டன. ஆனால், அங்கும் இப்போது ஒரு ‘செக்’ வைக்கப்பட்டிருக்கிறது.
சந்தையில் விறகின் தேவையானது கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. முன்னதாக நாளொன்றுக்கு சராசரியாக 1 டன் விற்கப்பட்ட விறகு, தற்போது 10 டன் வரை எகிறியுள்ளதாக வியாபாரிகள் பகீர் தகவலைத் தெரிவித்துள்ளனர். டிமாண்ட் அதிகமானதால் விறகு விலையும் ‘டபுள்’ மடங்காக உயர்ந்ததோடு, இப்போது விறகுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. சிலிண்டர் போனால் விறகு என நினைத்த மக்களுக்கு, அங்கேயும் இடி விழுந்தது போல் விலை ஏறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
