நாட்டின் பொருளாதாரத் தலைநகரான மும்பையில், 24 வயது மருத்துவ மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய 6 பக்க கடிதத்தில், தனது காதலன் மற்றும் நண்பர்கள் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த ஸ்ருதி சோனாவனே (24), நவி மும்பையில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் முதுகலை (MDS) பயின்று வந்தார். செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அவர் தனது அறையை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்துப் பார்த்தபோது, அவர் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரை, மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட 6 பக்க தற்கொலை கடிதத்தில், தனது காதலன் பசல் முகமது கான் என்பவரைப் பற்றி ஸ்ருதி குறிப்பிட்டுள்ளார். “ஆரம்பத்தில் எங்களிடையே சுமூகமான உறவு இருந்தது. ஆனால், சமீபகாலமாக அவர் எனது நடத்தையில் சந்தேகப்பட்டு என்னைத் துன்புறுத்தி வந்தார்,” என அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘ஷ்ரத்தா வாக்கர்’ கொலை வழக்கை ஒப்பிட்டு, ஸ்ருதியின் நண்பர்கள் அவரை எச்சரித்துள்ளனர். “ஷ்ரத்தாவைப் போலவே நீயும் ஒருநாள் பிரிட்ஜில் பிணமாகக் கிடப்பாய்” என்று நண்பர்கள் அடிக்கடி கிண்டல் செய்ததையும், அது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதையும் ஸ்ருதி அக்கடிதத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான பசல் கான், ஸ்ருதிக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, ஸ்ருதியின் தந்தையின் புகாரின் பேரில், தற்கொலைக்குத் தூண்டியதாக பசல் கானை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை கடிதத்தின் இறுதியில் ‘சாரி டாக்டர் பாங்கா’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக ஸ்ருதி, டாக்டர் பாங்காவிடம் பணிபுரிந்து வந்த நிலையில், அவரும் ஸ்ருதிக்கு மன அழுத்தம் கொடுத்திருக்கலாம் என அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயர்கல்வி பயிலும் மாணவி ஒருவர், காதல் விவகாரம் மற்றும் சக நண்பர்களின் கிண்டல் பேச்சு காரணமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
