2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ள நிலையில், அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தனது வெற்றிப்பயணம் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பாண்ட்யா, இந்த தருணத்திற்காக நீண்ட காலம் காத்திருந்ததாகக் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:
“2024 உலகக்கோப்பைக்கு பிந்தைய காலகட்டத்தில் நான் பல கடினமான சூழல்களைச் சந்தித்தேன். அந்த அனுபவங்கள் என்னை இன்னும் கடுமையாக உழைக்கத் தூண்டின. இந்தியாவுக்காகப் பல கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பதே என் வாழ்நாள் லட்சியம். நான் விளையாடும் ஒவ்வொரு தொடரிலும் ஒரு கோப்பையாவது வெல்ல வேண்டும் என்ற நம்பிக்கை எனக்குள் எப்போதும் உண்டு. இன்று அது நிஜமாகியுள்ளது.”
வெற்றி என்பது வெறும் வார்த்தைகளால் கிடைப்பதல்ல என்று குறிப்பிட்ட அவர், “உண்மையான கடின உழைப்பால் மட்டுமே வெற்றியை எட்ட முடியும். எப்போதும் தாழ்மையுடன் இருங்கள், நல்ல மனிதராக வாழுங்கள்; உழைப்புக்கான பலன் தானாகத் தேடி வரும்” எனத் தெரிவித்தார்.
தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களைப் பட்டியலிட்ட ஹர்திக், “அணியினர் மட்டுமின்றி, எனது பிஸியோ, ஊட்டச்சத்து நிபுணர் நிக்கோல், பயிற்சியாளர் சாகர், சமையல்காரர் விஜய் மற்றும் பாதுகாப்பு அதிகாரி சித்தாந்த் எனப் பலரின் உழைப்பு இதில் உள்ளது. குறிப்பாக, மேஹிகா என் வாழ்விற்குள் வந்த பிறகு வெற்றிகள் என்னைத் தொடர்ந்து தேடி வருகின்றன. நீங்கள் பார்க்கும் இந்த ஹர்திக் பாண்ட்யா, இத்தனை பேரின் கூட்டு உழைப்பின் விளைவு தான்,” என உருக்கமாகக் கூறினார்
தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், தற்போது அணியின் மூத்த வீரராக இருந்தாலும், இன்னும் 10 ஆண்டுகள் தொடர்ந்து விளையாட விரும்புவதாகத் தெரிவித்தார். “எனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பாதி தூரம் மட்டுமே கடந்துள்ளேன்.” “மீதமுள்ள காலத்திற்குள் ஐசிசி மற்றும் ஐபிஎல் கோப்பைகள் என மொத்தம் 10 கோப்பைகளை வெல்வதே எனது அடுத்த இலக்கு,” என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
