சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்த விவாதங்கள் அனல் பறந்து வரும் நிலையில், தற்போது நடிகர் பார்த்திபனின் பேச்சு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் திரிஷாவின் புகைப்படத்தை பார்த்த பார்த்திபன், “குந்தவை வீட்டிற்குள்ளேயே குந்து வைத்தால் பல பிரச்சனைகளை தீர்க்கலாம்” என இரட்டை அர்த்தத்தில் பேசியது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியது.

இதனால் கொதித்துப்போன திரிஷா, மைக் இருக்கிறது என்பதற்காக முட்டாள்தனமாக பேசுவது புத்திசாலித்தனம் ஆகாது என பார்த்திபனை கடுமையாக சாடி பதிவிட்டிருந்தார்.

திரிஷாவின் இந்த பதிலடியால் அதிர்ச்சியான பார்த்திபன், தான் விளையாட்டாக பேசியது தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டதாக கூறி ஆடியோ மூலம் மன்னிப்பு கேட்டார்.

இதோடு நிறுத்தாமல், தற்போது திரிஷாவிற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள பார்த்திபன், “கோடிட்ட இடங்களை நீங்கள் நிரப்புவதற்குள் விடியலாக முழு வீடியோ வரும்” என புதிராக பதிவிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.