2026-ஆம் ஆண்டு நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் மாரத்தான் போட்டியில் அமெரிக்க வீரர் நேதன் மார்ட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார். போட்டியின் இறுதித் தருணம் வரை கென்ய வீரர் மைக்கேல் கமுவா முன்னிலையில் இருந்த நிலையில், கடைசி சில நொடிகளில் அவரை முந்திய நேதன் மார்ட்டின், வெறும் 0.18 வினாடிகள் வித்தியாசத்தில் முதலிடத்தைப் பிடித்தார்.

மேலும் 2 மணிநேரம் 11 நிமிடங்கள் 18 வினாடிகளில் இலக்கை எட்டிய மார்ட்டினின் இந்த வெற்றி, லாஸ் ஏஞ்சல்ஸ் மாரத்தான் வரலாற்றிலேயே மிகக் குறைந்த நேர வித்தியாசத்தில் கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது. அமெரிக்க வீரர்கள் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இந்த மாரத்தானில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதேபோல் பெண்கள் பிரிவில் கென்யாவைச் சேர்ந்த 45 வயதான பிரிஸ்கா செரோனோ 2 மணிநேரம் 25 நிமிடங்கள் 18 வினாடிகளில் இலக்கைக் கடந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

“>

 

இந்நிலையில் சுமார் 27,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், அதிகப்படியான வெப்பம் காரணமாகப் போட்டியாளர்கள் 18 மைல்களைக் கடந்தாலே பதக்கம் வழங்கப்படும் என ஒருமுறை மட்டும் கடைபிடிக்கப்படும் விதிவிலக்கை ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்தனர். கடும் சவால்களுக்கு மத்தியிலும், இறுதிவரை போராடி வென்ற நேதன் மார்ட்டினின் இந்த “போட்டோ பினிஷ்” வெற்றி விளையாட்டு உலகில் பெரும் ஆச்சரியத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.