சுவாமிமலை முருகன் கோவிலில் சுமார் ₹3.55 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட லிஃப்ட் வசதியைத் தொடங்கி வைக்கச் சென்ற அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் கோவி.செழியன் ஆகியோருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க விழாவின் போதே லிஃப்ட் சரியாக வேலை செய்யாததால் ஆத்திரமடைந்த அமைச்சர் சேகர்பாபு, அங்கிருந்த லிஃப்ட் ஆபரேட்டரின் முதுகில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காகக் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், முதல் நாளிலேயே சொதப்பியதால் அமைச்சர்கள் இருவரும் கடும் கோபத்திற்கு ஆளாகினர்.

​மற்றொரு லிஃப்ட்டும் பாதியிலேயே நின்று போனதால், அமைச்சர் கோவி.செழியனும் அதிகாரிகளைக் கடுமையாகக் கடிந்து கொண்டார். பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட ஒரு வசதி, அமைச்சர்கள் முன்னிலையிலேயே முடங்கிப் போனது அரசுத் துறையின் மெத்தனப் போக்கைக் காட்டுவதாகப் பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, விவாதத்தை கிளப்பியுள்ளது.