நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஏழு வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காரசாரமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த அப்பாவிச் சிறுமியை ஒரு மிருகம் வேட்டையாடியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர் இந்த ஆட்சியில் பாலியல் குற்றவாளிகளுக்குக் காவல்துறையைப் பார்த்தால் பயமே இல்லாமல் போய்விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் நிலவுவதாகவும் இது ஒரு அரசாங்கமா அல்லது சுடுகாடா என அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து விரைந்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டிய காவல்துறை மெத்தனமாகத் தூங்கிக் கொண்டிருப்பதாக அருண்ராஜ் விமர்சித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஒவ்வொரு குடும்பமும் தனது குடும்பம் போன்றது என்று வசனம் மட்டும் பேசுவதாகவும் ஆனால் போதைப் பொருள் கலாசாரத்தை ஒழிக்கத் தவறியதால் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரை பிஞ்சு சிறுமிகளை வேட்டையாடிய பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த அரசு வாங்கிக் கொடுத்த தண்டனை விவரங்கள் என்ன என்பதை முதல்வர் அறிவிக்கத் தயாரா என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
இந்த கையாலாகாத ஆட்சியை மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள் என்று எச்சரித்துள்ள அவர் மக்களின் மனசாட்சியைத் தொட்டு இந்த அரசு செயல்படுகிறதா என்றும் வினவியுள்ளார்.
