மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், ஆட்டோ உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் தொழிலதிபர் ஒருவரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைப் பறித்த பெண் காங்கிரஸ் நிர்வாகி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்தவர் பாரத் பூதானி. இவர் ஆட்டோ உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதுடன், ராமலீலா கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இவருக்கும் குவாலியரைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகியான ரீதா ஆர்யா என்பவருக்கும் இந்தூரில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகத்தைப் பயன்படுத்தி, ரீதா ஆர்யா தொழிலதிபர் பாரத்தை குவாலியரில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பாரத் அங்கு சென்றபோது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

தனி அறையில் ரீதாவுடன் பாரத் இருந்தபோது, ஏற்கனவே சமையலறையில் முகமூடி அணிந்து மறைந்திருந்த ரீதாவின் கணவர் ராஜேந்திர புந்தேலா மற்றும் மருமகன் விஷால் ஆர்யா ஆகியோர் திடீரென அறைக்குள் புகுந்தனர். அவர்கள் பாரத் மற்றும் ரீதா ஆர்யாவை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர். “இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உன் மானத்தை வாங்கிவிடுவோம்” என மிரட்டி, பாரத் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் மோதிரங்கள் என மொத்தம் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைப் பறித்துக்கொண்டனர்.

அக்கும்பலிடமிருந்து தப்பித்த பாரத் பூதானி, உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கொள்ளை நடந்த பிறகு ரீதா ஆர்யாவும் அவரது மகள் நிதி ஆர்யாவும் அதே பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடியது உறுதியானது.

போலீஸாரின் அதிரடி விசாரணையில், ரீதா ஆர்யா தனது கணவர், மகள் மற்றும் மருமகனுடன் சேர்ந்து திட்டமிட்டு இந்த ‘ஹனி ட்ராப்’ வேலையைச் செய்தது அம்பலமானது. இதையடுத்து ரீதா ஆர்யா (காங்கிரஸ் நிர்வாகி), ராஜேந்திர புந்தேலா (கணவர்), நிதி ஆர்யா (மகள்), விஷால் ஆர்யா (மருமகன்) ஆகிய நான்கு பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட தங்க நகைகளும் மீட்கப்பட்டன.

மேலும் டிஜிட்டல் மோசடிகள் பெருகி வரும் வேளையில், தெரிந்த நபர்களே இதுபோன்று வலைவிரித்துப் பணத்தைப் பறிக்கும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.