2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், அணியில் எடுக்கப்படும் கடினமான முடிவுகள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியின் போது அக்சர் படேலை நீக்கியது போன்ற முடிவுகளைத் தானும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் இணைந்து எடுப்பதாக அவர் கூறினார்.
அந்தப் போட்டியில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், அணியின் தேவைக்காகவே சில மாற்றங்கள் செய்யப்படுவதாக அவர் விளக்கினார். மேலும், “மைதானத்தை அமைதிப்படுத்துவதே எங்கள் இலக்கு” என்ற நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னரின் கருத்துக்குப் பதிலடி கொடுத்த சூர்யகுமார், “யாராவது புதுசாக ஏதாவது சொல்லுங்களேன், எல்லாரும் இதையேதான் சொல்கிறார்கள்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த மாபெரும் இறுதிப் போட்டி இன்று (மார்ச் 8) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இந்திய அணி நியூசிலாந்தை வென்றதில்லை என்ற சாதனை இருந்தாலும், இந்திய வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் இருப்பதாக சூர்யகுமார் தெரிவித்தார்.
சொந்த மண்ணில் விளையாடுவது இந்தியாவுக்குக் கூடுதல் அழுத்தத்தைத் தரும் என்று நியூசிலாந்து அணி நம்பினாலும், அதையெல்லாம் முறியடித்துக் கோப்பையை வெல்ல இந்திய அணி தீவிரமாகத் தயாராகி வருகிறது.
