திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருமலை பகுதியில், விதிமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பிக் பாஸ் நடிகைகளின் செயல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தனுஜா மற்றும் அவரது தோழிகள் திருமலையில் உள்ள தங்கும் விடுதி அருகே கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.

மேலும் புனிதத்தலமான திருமலையில் இதுபோன்ற கேளிக்கை நடவடிக்கைகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுவெளியில் இவர்கள் கேக் வெட்டியது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் விதிகளின்படி புனிதத்தன்மை காக்கப்பட வேண்டிய இடத்தில், விதிமுறைகளை மீறி செயல்பட்டது குறித்து நடிகைகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. திருமலையின் மாண்பைச் சிதைக்கும் வகையில் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.