மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் 62 வயது மூதாட்டி ஒருவர் மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்கர் மாவட்டம் போஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த மூதாட்டி கடந்த 30 ஆண்டுகளாகத் தனது கணவருடன் ஊருக்கு வெளியே உள்ள விவசாய நிலத்தில் உள்ள குடிசையில் வசித்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்த நிலையில், மூதாட்டி தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார்.

செவ்வாய்க்கிழமை இரவு மகன் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சச் சென்றிருந்த நிலையில், மருமகள் வேலை விஷயமாக ராஜஸ்தான் சென்றிருந்தார். புதன்கிழமை காலை மகன் வீடு திரும்பியபோது தாய் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தேடுதல் வேட்டையின் போது, அருகில் உள்ள கோதுமை வயலில் மூதாட்டி ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

மூதாட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்ட போது, அவரது நாக்கு மற்றும் மூக்கு ஆகிய பகுதிகளில் கூர்மையான ஆயுதங்களால் பலமாகத் தாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. குற்றவாளிகள் மூதாட்டியைப் பயங்கரமான முறையில் சித்ரவதை செய்துள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர். மேலும், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தடயங்களை வைத்து, மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து போஜ்பூர் காவல் ஆய்வாளர் சங்கீதா சர்மா கூறுகையில், “மூதாட்டி மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திலிருந்து முக்கிய ஆதாரங்களைச் சேகரித்துள்ளோம். இந்தச் சம்பவம் தொடர்பாக மூதாட்டியின் பேரனைக் காவல் துறையினர் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே பாலியல் வன்கொடுமை குறித்த உண்மை நிலவரம் தெரியவரும்.

வழக்கின் தீவிரத்தன்மை கருதி, இரண்டு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மூதாட்டியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தனர் என்றார். மேலும் இந்தக் கொடூரக் கொலைக்கான காரணம் குறித்துப் போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.