புதுடெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கல்கோடியாஸ் பல்கலைக்கழக அரங்கம் பெரும் சர்ச்சையில் சிக்கியது. அங்கு காட்சிப்படுத்தப்பட்ட ரோபோ நாய் இந்திய தயாரிப்பு என்று தவறான தகவல் அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து அந்த அரங்கைக் காலி செய்யுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம் அந்தச் சாதனத்தின் தொழில்நுட்பப் பின்னணி குறித்து அங்கிருந்த பிரதிநிதி தவறான புரிதலில் பேசியதால் இந்த குழப்பம் ஏற்பட்டதாகத் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளது. சீனா தயாரிப்பான இந்த ரோபோ நாய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த பேராசிரியை நேகா சிங் தற்போது எங்கு இருக்கிறார் என்பது குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை.
இது தொடர்பாகப் பேசிய பேராசிரியை நேகா சிங் அந்த ரோபோ நாய் இந்தியாவில் உருவாக்கப்பட்டது என்று கூறுவது தனது நோக்கமல்ல என்றும் ஆர்வ மிகுதியால் பேசும்போது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தான் ஒரு தகவல் தொடர்புத் துறை பேராசிரியை என்றும் அவசரத்தில் பேசியதால் ஏற்பட்ட தெளிவற்ற விளக்கத்திற்காக வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தால் மாணவர்கள் உருவாக்கிய மற்ற சிறந்த படைப்புகள் மறைக்கப்படக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது அந்த ரோபோ நாய் மீண்டும் பல்கலைக்கழக ஆய்வகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் அதன் வடிவமைப்பைக் கற்றுக்கொள்ளவும் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் அது பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
